Subscribe News Feed Subscribe Comments

கறையான்கள் பற்றி திருக்குர்ஆன்!

திட்டமிட்டுச் செயலாற்றும் கறையான்
அவருக்கு (சுலைமானுக்கு) நாம் மரணத்தை விதித்த போது பூமியல் ஊர்ந்து செல்லும் கறையான் தான் அவரது மரணத்தை (ஜின்களுக்குக்) காட்டிக்கொடுத்தது. (34:14)

கரையான்கள் எறும்புகளைப் போல இருந்தாலும், உண்மையில் அவை எறும்புகள் வகை அல்ல. எறும்புகள் Hymenoptera என்ற வரிசையைச் சேர்ந்தது. ஆனால், கரையான்கள் Isoptera என்ற வரிசையைச் சேர்ந்தது. Iso என்றால், 'ஒரே மாதிரி ' என்று பொருள். Ptera என்றால், 'இறக்கை ' என்று பொருள். அதாவது, கரையான்களின் மறுவடிவமான ஈசல்களின் முன் மற்றும் பின் இறக்கைகள் ஒரே மாதிரி இருப்பதால், இந்த வகைப்பாட்டியல் பெயர். கரையான்களில், உலகம் முழுதும் சுமார் 275 பேரினங்களும், சுமார் 2750 சிற்றினங்களும் உள்ளன. கரையான்களில் ஒரு சில சிற்றினங்கள், மரங்களில் வாழும். அவை மரங்களை, அரித்து தின்று விடும். மண்ணில் புற்று அமைத்து வாழும்.

கரையான்களும், தேனீக்களைப் போல ஒரு சமுதாய பூச்சி (Social insect) ஆகும். ஏன் அப்படி அழைக்கிறோம் எனில், அவற்றால் தனித்து வாழ இயலாது. ஒரு கரையான் கூட்டத்தில் இராணிக்கரையான் (Queen), மன்னர் கரையான் (King), இராணுவ வீரர்கள் (Soldiers) மற்றும் பணிக்கரையான்கள் (Workers) என நான்கு வகை இருக்கும். இதில் இராணுவ வீரர்களும், பணிக்கரையான்களும் மலட்டுத் தன்மை கொண்டவை. ஆனால் இவையும் பிறப்பால் மலடு அல்ல. வளர்ப்பால்தான் மலடு ஆகின்றன. தேனீக்களைப் போல இராணிக்கரையான் தன் உடலிலிருந்து Queen pheromone எனப்படும் ஒருவித பிரத்யேக சுரப்பினைச் சுரக்கும். இந்த சுரப்பினை எல்லா பணி மற்றும் இராணுவ வீரர்கள் கட்டாயமாக குடிக்க வேண்டும். அவ்வாறு குடிக்கும்பட்சத்தில் அவை மலடு ஆகிவிடும்.

இராணுவ வீரர்களுள் இரண்டு வகை உண்டு. முதல்வகை பருத்த தலையுடன், முகத்தில் ஒரு பிரத்யேக அரிவாள் போன்ற கொடுக்குடன் இருக்கும். அவை Mandibulate Soldiers எனப்படும். இவை பகைவர்களின் மீது தாக்குதல் நடத்தி விரட்டிவிடும். அடுத்த வகை, Nasute Soldiers எனப்படும். இவை பகைவர்களின் மீது துர்நாற்றம் மிக்க சுரப்பினைத் துப்பி விரட்டிவிடும். இதில் நாம் கவனிக்க வேண்டிய விசயம், இராணுவ வீரர்கள் கண்பார்வையற்ற குருடர்கள். இராணுவ வீரர்களுள் ஆண், பெண் என இருபாலருமே உண்டு. பணிக்கரையான்களும் கண்பார்வையற்ற குருடர்களே ! அவற்றிலும், ஆண், பெண் என இருபாலருமே உண்டு. இராணுவ வீரர்கள் மற்றும் பணிக்கரையான்களின் வாழ்நாள் 1-2 ஆண்டுகள் ஆகும். பணிக்கரையான்கள் புற்றினைக் கட்டுதல், பழுதடைந்த புற்றினைச் சரிசெய்தல், இளம்கரையான், இராணுவ வீரர்கள், மன்னர் மற்றும் இராணி கரையான்களுக்கு உணவு கொடுத்தல் என பல வேலைகளைச் செய்யும்.

இராணிக்கரையான் ஒரு நாளைக்கு சுமார் 2000 முட்டைகள் வைக்கும். அதாவது, ஒவ்வொரு 15 நொடிக்கும் ஒரு முட்டை வைக்கும். இராணிக்கரையான்களின் வாழ்நாள் 15-25 ஆண்டுகள் ஆகும். இராணுவ வீரர்கள் மற்றும் பணிக்கரையான்களுக்கு ஒரு குறிப்பிட்ட வாசனை உண்டு. ஒரு வேளை, பாதுகாப்பு பணியில் உள்ள இராணுவ வீரர்கள் பகைவர்களுடனான போரில் கணிசமாக இறந்து விட்டால், இந்த வாசனை குறைந்துவிடும். இந்த Signal கிடைத்தவுடன், இராணிக்கரையான் இராணுவ வீரர்களுக்கான முட்டைகளை வைக்கும். இப்படியாக இந்த கரையான்களுக்கு தனி இராஜியங்கள் உண்டு என்பதை அறியும்போது இந்த சின்னஞ்சிறிய கண்தெரியாத பூச்சிக்கு இத்தனைப்பெரிய ஆற்றலைக் கொடுத்த இறைவன் எப்பேர்ப்பட்ட சக்திபடைத்தவன் என்பதை நாம் அறிய முடிகின்றது.
..வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான் அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்.(திருக்குர்ஆன் 3:29) ...வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள அனைத்தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம். அவன் நாடியதைப் படைக்கிறான் இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.(திருக்குர்ஆன் 5:17 )


பாம்பு ஏன் புற்றுக்கு வருகிறது ?
ஒரு கரையான் புற்றில், பல மில்லியன் கரையான்கள் இருக்கும். அவற்றின் வளர்சிதை மாற்றங்களால் உருவாகும் வெப்பம் மற்றும் நீராவி ஆகியன ஒருவிித மிதவை உந்து விசைகளை (Buoyant forces) உள்ளிழுக்கும். எனவே புற்றின் உள்ளிருக்கும் காற்று Central chimney மூலம் மேலே வரும். அப்போது புற்றின் உள்காற்றிலிருக்கும் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு, வெப்பம் மற்றும் நீராவி ஆகியன Surface conduits மூலம் புற்றின் வெளிக்காற்றுடன் பரிவர்த்தனை செய்துகொள்ளும். எனவே புத்தம் புதிய காற்று, மீண்டும் புற்ிறுக்குள் Surface conduits, Central chimney மூலம் உள்ளிழுக்கப்படும். எனவே புற்று எப்போதும் சில்லென்றே இருக்கும். எனவேதான், பாம்பு புற்றுக்கு வந்து தங்கிவிடும்.

கரையான்கள் மரம் மற்றும் நூல்களை உண்ணுகிறதே, அதை எப்படி செரிக்கிறது ?

பொதுவாக, பேப்பர் மற்றும் மரங்களில், செல்லுலோஸ் என்ற பொருள் இருக்கும். அதை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதி நமக்கோ, கரையான்களுக்கோ இல்லை. கரையான்கள் தங்கள் குடலில் Protozoa க்களுக்கு உணவும் உறைவிடமும் கொடுக்கும். இதற்குக் Protozoa க்கள் கரையான்களுக்கு செல்லுலோஸை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதியைக் கொடுக்கும். இப்படித்தான் கரையான்களுக்கு உணவு செரிக்கின்றது.


நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் அற்பமானதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். இறைநம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்.( திருக்குர்ஆன்2:26 )


இத்துணை ஆற்றல்களைப் பெற்றிருக்கும் இந்த அதிசயப்பிராணிகளான கரையான்களுக்குக் கண்களே இல்லை என்பது அதைவிடவும் அதிசயமல்லவா? கொசுக்களுக்கு 100 கண்களைக் கொடுத்த இறைவன் கண்களே இல்லாதும் என்னால் படைப்புகளை படைத்து இயங்கச் செய்யமுடியும் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.
 
TNB | Distributed by Deluxe Templates