Subscribe News Feed Subscribe Comments

கஃபா (முதல் இறையில்லம்) வரலாறு

அகில உலகங்களையும் படைத்த அல்லாஹ், தான் ஒருவன் மட்டும் தான் கடவுள் என்பதற்கு, அவற்றை அத்தாட்சிகளாகவும் ஆக்கினான். இவை இன்றளவும் அல்லாஹ் மட்டும் தான் ஒரே கடவுள் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன.
அப்படிப் பட்ட அத்தாட்சிகளில் உள்ளவை தான் அவனுடைய புனிதமிக்க ஆலயமாகிய கஅபாவும் அது அமைந்துள்ள மக்கமா நகரமும் ஆகும்.
உலக முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டுமிடமாகவும், உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டைப் பறைசாற்றக் கூடியதாகவும் இவ்வத்தாட்சிகள் அமைந்துள்ளன.


'கஅபா' ஆலயத்திற்கும், மக்கமா நகரத்திற்கும் மற்ற ஆலயங்களை விடவும், நகரங்களை விடவும் தனித்த சிறப்புகளும், சட்டங்களும் உள்ளன. அப்படிப்பட்ட சிறப்புகளில் சிலவற்றைக் காண்போம்.


உலக முஸ்லிம்களின் ஒரே கிப்லா


கஅபா' ஆலயம் தான் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் தொழுகையின் போது முன்னோக்கும் திசையாக அமைந்துள்ளது. இது உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. ஒரு முஸ்லிம் எங்கிருந்தாலும் அவன் தொழுகையின் போது கஅபாவை முன்னோக்க வேண்டும்.


நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக! எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், எனது அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப் படுத்துவதும், நீங்கள் நேர் வழி பெறுவதுமே இதற்குக் காரணம். (அல்குர்ஆன் 2:150)


முதல் ஆலயம்


மக்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்காக முதலில் கட்டப்பட்ட பள்ளிவாசல் மக்காவிலுள்ள 'கஅபா' ஆலயமாகும்.


அகிலத்தின் நேர்வழிக்கு உரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். (அல்குர்ஆன் 3:96)


'கஅபா' ஆலயத்தை முதன் முதலில் கட்டியவர்கள் நபி ஆதம் (அலை) அவர்களாவார்கள். அதைப் புனர் நிர்மாணம் செய்தவர்கள் நபி இப்ராஹீம் (அலை) ஆவார்கள். ஆதம் (அலை) அவர்கள் முதலில் கஅபாவைக் கட்டி, 40 வருடங்களுக்குப் பிறகு பாலஸ்தீனத்தில் உள்ள ''மஸ்ஜிதுல் அக்ஸா''வைக் கட்டினார்கள். இதற்குப் பின்வரும் செய்தி சான்றாக உள்ளது.
நான் நபி (ஸல்) அவர்களிடம் ''பூமியில் முதலில் அமைக்கப்பட்ட பள்ளி எது?'' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல் மஸ்ஜிதுல் ஹராம்' (கஅபா) என்று கூறினார்கள். பிறகு எது? என்றேன். 'அல் மஸ்ஜிதுல் அக்ஸா' என்று கூறினார்கள். ''இந்த இரண்டிற்கும் மத்தியில் எத்தனை (வருடங்கள் இடைவெளி?)'' என்று கேட்டேன். ''நாற்பது வருடங்கள்'' என்று கூறினார்கள்.அபூதர் (ரலி) புகாரி 3366


ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட்ட 'கஅபா' நாளடைவில் பாழடைந்து செடி, கொடிகள் சூழப்பட்டதாக மாறியது. இஸ்மாயீல் (அலை) அவர்கள் வாலிபப் பருவத்தை அடையும் பொழுது தான் அல்லாஹ் கஅபாவைப் புணர் நிர்மாணம் செய்யுமாறு கட்டளையிடுகிறான்.


எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறை வேற்றுவதற்காகக் குடியமர்த்தி விட்டேன். (அல்குர்ஆன் 14:37) என இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறினார்கள்.


ஹாஜரா, கைக்குழந்தை இஸ்மாயீலையும் பாலைவனத்தில் விட்டு வரும் போது நபி இப்ராஹீம் (அலை) மேற்கண்ட 'துஆ'வை கூறினார்கள் என்பது ஹதீஸின் (புகாரி 3364) மூலம் தெளிவாகிறது.
எனவே சிதிலமடைந்த பள்ளிவாசலைத் தூய்மை செய்யுமாறும், அதன் அடித்தளத்தை உயர்த்துமாறும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.


'தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!'' என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம். (அல்குர்ஆன் 2:125)


அந்த ஆலயத்தின் அடித் தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது ''எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்'' (என்றனர்.) (அல்குர்ஆன் 2:127)
மக்காவிற்குப் பல பெயர்கள் உள்ளன. அவை:


1. மக்கா, 2. பக்கா, 3. அல் பலதுல் அமீன் (அபயமளிக்கும் ஊர்), 4. உம்முல் குரா (நகரங்களின் தாய்),


நபி (ஸல்) அவர்கள் மக்காவின் மீது அளப்பரிய பற்று வைத்திருந்தார்கள். அங்கேயே வாழ வேண்டும் என எண்ணினார்கள்.


''நபி (ஸல்) அவர்கள் ''ஹஸ்வா'' என்ற ஒட்டகத்தின் மீது நின்றவர்களாக மக்காவை நோக்கி, ''நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! என்னுடைய சமுதாயம் (உன்னை விட்டும்) என்னை வெளியேற்றி இருக்காவிட்டால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)'' என்று கூறினார்கள். அப்துல்லாஹ் பின்அதீ (ரலி) திர்மிதீ 3860


மக்காவை நோக்கி நபி (ஸல்) அவர்கள் கூறிய இச்சொற்கள், அவர்கள் மக்காவின் மீது கொண்டுள்ள அளப்பரிய பற்றை வெளிப்படுத்துகிறது.


அபய பூமி


மக்கமா நகரத்தை அல்லாஹ் அபயமளிக்கக் கூடிய பூமியாக ஆக்கியுள்ளான். அல்லாஹ் கூறுகிறான்:


அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்க வில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 28:57)


அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். (அல்குர்ஆன் 3:97)


இப்ராஹீம் (அலை) அவர்களின் 'துஆ'வின் காரணத்தால் அல்லாஹ் மக்காவைப் புனித நகரமாக்கினான்.


நபி (ஸல்) கூறினார்கள், ''இப்ராஹீம் (அலை) மக்காவை புனிதமாக்கினார். அதற்காக பிரார்த்தனை செய்தார். இப்ராஹீம் மக்காவைப் புனிதமாக்கியது போல் நான் மதீனாவைப் புனிதமாக்கி உள்ளேன். நபி இப்ராஹீம் (அலை) மக்காவிற்காக பிரார்த்தனை செய்தது போல், நான் மதீனாவிற்கு அதனுடைய ஸாவு (என்ற அளவையிலும்) முத்து (என்ற அளவையிலும் அபிவிருத்தி செய்யுமாறு) பிரார்த்தனை செய்துள்ளேன். அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) புகாரி.


இப்ராஹீம் நபி செய்த பிரார்த்தனையை திருக்குர்ஆனில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.


''இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!'' (அல்குர்ஆன் 2:126)
அல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை ஏற்று மக்காவைப் பாதுகாப்பு மையமாக ஆக்கினான்.
திருக்குர்ஆன் அபயபூமி என அறிவித்து 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபயபூமியாகவே உள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகவும் இது இருந்து வருகிறது. குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இது மிகப் பெரும் சான்றாக அமைந்துள்ளது.


மேலும் உலகத்தில் விளைகின்ற அனைத்து கனி வர்க்கங்களும் மக்காவில் தாராளமாக வந்து குவிந்து கொண்டிருப்பதும், இது இறைவனின் வார்த்தைகள் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.


அல்லாஹ்வுடைய பாதுகாப்பு
'கஅபா' ஆலயத்திற்கு அல்லாஹ் தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியுள்ளான். கியாமத் நாள் வரை அதை எந்தப் படையாலும் அழித்து விட முடியாது. பின்வரும் வரலாற்றுச் சம்பவம் அதற்குச் சிறந்த சான்றாகும்.


அப்ரஹா எனும் மன்னன் தன்னுடைய யானைப் படையுடன் கஅபாவைத் தகர்ப்பதற்காக வந்தான். அவனை எதிர்த்துப் போராடக் கூடிய எந்தப் படையும் அப்போது மக்காவில் இல்லை. என்றாலும், அல்லாஹ் ஒரு வகையான பறவைகளை அனுப்பி, அந்த யானைப் படையை அழித்து தன்னுடைய ஆலயத்தைப் பாதுகாத்தான்.


இதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:


''(முஹம்மதே!) யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா? அவர்களிடம் பறவைகளைக் கூட்டம், கூட்டமாக அனுப்பினான். சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான். (அல்குர்ஆன் 105:1-5)


மேலும் கியாமத் நாள் நெருங்கும் போது ஒரு படை 'கஅபா'வை இடிப்பதற்காகப் படையெடுத்து வருவார்கள். அல்லாஹ் அவர்களையும் அழித்து கஅபாவைப் பாதுகாப்பான் என்ற செய்தியை பின்வரும் நபிமொழி மூலம் அறிந்து கொள்ளலாம்.


''ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள். வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாம் நபர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கு அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே!'' எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத் தான் செய்வார்கள். எனினும் அதற்குப் பிறகு அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப் படுவார்கள்'' என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2118


இறைவன் 'கஅபா' ஆலயத்திற்கு தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியிருப்பது அதனுடைய சிறப்பைக் காட்டுகிறது.


கொலை, போர் செய்தல் கூடாது


நகரங்களின் தாயான மக்காவிற்கு இறைவன் வழங்கியுள்ள சிறப்பு அம்சங்களில் சில:


அங்கு கொலை செய்வதோ, போர் புரிவதோ கூடாது. மேலும் அங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டுவதும், மரங்களை வெட்டுவதும், செடி, கொடிகளைப் பறிப்பதும் கூடாது.
''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது (மக்களிடையே) எழுந்து நின்று, ''அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைத்த போதே மக்காவை புனிதப்படுத்தி விட்டான். ஆகவே, அது அல்லாஹ் புண்ணியப்படுத்திய காரணத்தால் இறுதி நாள் வரை புனிதமானதாகும். எனக்கு முன்பும் எவருக்கும் இங்கு போர் புரிவது அனுமதிக்கப் படவில்லை. எனக்குக் கூட சிறிது நேரம் மட்டுமே இங்கு போர் புரிய அனுமதிக்கப்பட்டது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது, இங்குள்ள மரங்களை வெட்டக் கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது. பிறர் தவற விட்ட பொருளை அதை அறிவிப்பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது'' என்று சொன்னார்கள். உடனே அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் தூதரே! 'இத்கிர்' எனும் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது உலோகத் தொழிலாளர்களுக்கும், வீடுகளுக்கும் தேவைப்படுகின்றதே'' என்று கேட்க நபி (ஸல்) அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாயிருந்து விட்டு பிறகு ''இத்கிரைத் தவிர தான். ஏனெனில் அதை வெட்டிப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதாகும்'' என்று பதிலளித்தார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி 4313, 1834


புனிதமிக்க மக்கா நகரில் பாவமான காரியங்களைச் செய்வோருக்குக் கடுமையான வேதனை உள்ளது என அல்லாஹ் எச்சரித்துள்ளான்.


(ஏக இறைவனை) மறுத்தோருக்கும், அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுத்தோருக்கும், மற்றும் அங்கே அநீதியின் மூலம் குற்றம் புரிய நாடுவோருக்கும் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம். (அல்குர்ஆன் 22:25)


நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ்விடத்தில் மூன்று நபர்கள் மிகவும் வெறுப்புக்குரியவர்கள். 1. ஹரம் ஷரீஃபில் அநீதியின் மூலம் குற்றம் புரிபவன், 2. இஸ்லாத்தில் அறியாமைக் கால நடைமுறையை நாடக்கூடியவன், 3. தகுந்த காரணமின்றி ஒரு உயிரைப் பறிக்க நாடுபவன். இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி 6882


காஃபிர்கள் நுழைவதற்குத் தடை


இஸ்லாமிய வணக்கத்தலங்களான பள்ளிவாசல்களுக்கு மற்றவர்கள் வருவதை இஸ்லாம் தடுக்கவில்லை.
ஆயினும் உலகின் ஒரே இறைவனை வணங்குவதற்கு எழுப்பப்பட்ட முதல் ஆலயமான கஃபா மற்றும் அதன் வளாகத்திற்கு மட்டும் பல கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை அனுமதிக்கக்கூடாது என அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.


நம்பிக்கை கொண்டோரே! இணை கற்பிப்போர் அசுத்தமானவர்களே. எனவே அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமை இவ்வாண்டுக்குப் பின் நெருங்கக் கூடாது (அல்குர்ஆன் 9:28)


ஹஜ்ஜத்துல் வதாவுக்கு முந்தைய வருடம் நபி (ஸல்) அவர்கள் அபூபக்கர் (ரலி) தலைமையில் மக்களை ஹஜ்ஜுக்கு அனுப்பி வைத்தார்கள். துல்ஹஜ் பிறை பத்தாம் நாள், ''எச்சரிக்கை! இந்த வருடத்திற்குப் பின்னர் இணை வைப்பவர்கள் யாரும் ஹஜ் செய்யக் கூடாது. கஅபாவை நிர்வாணமாகத் தவாஃப் செய்யக் கூடாது'' என அறிவிக்கச் செய்தார்கள். அபூஹுரைரா (ரலி) புகாரி 1622


பல கடவுட் கொள்கை கொண்டவர்களைத் தடை செய்வது மனித நேயத்திற்கு எதிரானது என்று கருதக் கூடாது.


ஏனெனில் கஃபாவை அபய பூமியாக இறைவன் அமைத்துள்ளான். அந்த ஆலயத்திற்கும், அதன் வளாகத்திற்கும் தனிச் சட்டங்கள் உள்ளதைப் பார்த்தோம். அங்கே பகை தீர்க்கக் கூடாது; புல் பூண்டுகளைக் கூட கிள்ளக் கூடாது என்பன போன்ற விதிகள் உள்ளன.


இந்தச் சிறப்பான விதிகளை இஸ்லாத்தை ஏற்றவர்களால் தான் கடைப்பிடிக்க இயலும். உலகம் அழியும் நாள் வரை அறிவிக்கப் பட்டுள்ள அபயபூமியாக அது அமைந்துள்ளதால் தான் இவ்வாறு மற்றவர்களுக்கு அங்கே தடை விதிக்கப்படுகிறது.
ஆனால் மற்ற பள்ளிவாயில்களில் அவர்கள் செல்வதற்கு எந்தத் தடையுமில்லை.


புனிதப் பயணம் மேற்கொள்ளுமிடம்


இஸ்லாத்தில் மூன்று இடங்களைத் தவிர வேறு எங்கும் புண்ணியத்தை நாடி பயணம் செய்வது கூடாது. அவ்வாறு செய்வது பாவமான காரியமாகும்.
புண்ணியத்தை நாடி பயணம் செய்யும் மூன்று இடங்களில் முதலாவது இடமாக நபி (ஸல்) அவர்கள் கஃபதுல்லாஹ்வைக் கூறியுள்ளார்கள்.


''(புண்ணியத்தைத் தேடி) மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறு எங்கும் பயணம் மேற்கொள்ளக் கூடாது. 1. அல் மஸ்ஜிதுல் ஹராம், 2. மஸ்ஜிதுன் நபவி, 3. மஸ்ஜிதுல் அக்ஸா'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஸயீதுல் குத்ரீ (ரலி) புகாரி 1189
மேலும் செல்வமும், உடல் வலிமையும் உடையவர்கள் தம்முடைய வாழ்நாளில் ஒரு தடவையாவது ''கஃபா'' ஆலயம் சென்று ''ஹஜ்'' செய்வது கட்டாயக் கடமையாகும்.
அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன் 3:97)

அளவற்ற நன்மை


'கஅபா' ஆலயத்தில் தொழுகின்ற ஒரு தொழுகை மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஒரு இலட்சம் தொழுகைகளை விட அதிகமான நன்மைகள் நிறைந்ததாகும்.


என்னுடைய பள்ளி (மஸ்ஜிதுன் னபவி)யில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். அல் மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா)வைத் தவிர! (ஏனென்றால் அதற்கு அதை விட அதிகமான நன்மைகள் உள்ளது.) அபூஹுரைரா (ரலி) புகாரி 1190


''மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகை தொழுவது மற்ற பள்ளிகளில் ஒரு இலட்சம் தொழுகை தொழுவதை விடச் சிறந்ததாகும்'' என நபி (ஸல்) கூறியுள்ளார்கள். ஜாபிர் (ரலி) இப்னுமாஜா 1396, அஹ்மத் 14167


எந்நேரமும் வழிபடலாம்


நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட நேரங்களில் தொழுவதற்குத் தடை விதித்துள்ளார்கள். அந்நேரங்களில் தொழுவது கூடாது. உதாரணத்திற்கு சூரியன் உதிக்கும் போதும், உச்சியிலிருக்கும் போதும், மறையத் துவங்கும் பொழுதும் தொழுவது கூடாது.


ஆனால் இந்தத் தடை ''கஅபா''விற்கு மட்டும் கிடையாது. அங்கு எந்நேரமும் தொழுது கொள்ளலாம். வணக்க வழிபாடுகளை நிறைவேற்றலாம்.
நபி (ஸல்) அவர்கள், அப்து மனாஃப் குடும்பத்தினரே! இரவிலோ, பகலிலோ எந்த நேரத்திலும், ஒருவர் தான் நாடிய பொழுது இந்த (கஅபா) வீட்டை வலம் வருபவரையோ, தொழுபவரையோ தடுக்காதீர்கள்.


ஜுபைர் இப்னு முத்இம்(ரலி) திர்மிதீ 795


தஜ்ஜாலை விட்டும் பாதுகாப்பு


இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்று தஜ்ஜாலின் வருகையாகும். இவன் உலகினுடைய அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வான். ஆனால் மக்காவிற்கும், மதீனாவிற்கும் மட்டும் செல்ல முடியாது.


''மக்கா, மதீனாவைத் தவிர, தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இருக்காது. அவற்றின் (மக்கா, மதீனா) ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் மலக்குகள் அணிவகுத்து அவனைத் தடுத்தவர்களாக இருப்பார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அனஸ் பின் மாலிக் (ரலி) புகாரி 1881, முஸ்லிம் 5236


கஅபா இடிக்கப்படுதல்


கியாமத் நாள் வரை கஅபாவில் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் செய்யப்படும். கஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் ஏற்படும்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும். உம்ராவும் செய்யப்படும். 'கஅபா'வில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் வரும். அபூஸயீத் (ரலி) புகாரி 1593.


கஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வரும் போது சிலர் அதனை இடித்துப் பாழ்படுத்துவார்கள்.
இதைப் பற்றி அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது.


நபி (ஸல்) அவர்கள், அபீஸீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள் கூறினார்கள். புகாரி 1591, 1896


''வெளிப்பக்கமாக வளைந்த கால்களை உடைய, கருப்பு நிறத்தவர்கள், ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி கஅபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்றிருக்கிறது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி 1595.
கியாமத் நாள் வரும் வரை தான் அல்லாஹ் கஅபாவை அபய பூமியாகவும், பாதுகாப்புத் தலமாகவும் ஆக்கியுள்ளான். எனவே கியாமத் நாள் வரும் போது ''கஅபா'' இடிக்கப்படுவது இறைவனுடைய பாதுகாப்புக்கு எதிரானது கிடையாது.

நல்லுணர்வு பெறுவோம்


இப்னு உமர் (ரலி), நபி (ஸல்) அவர்கள் மினாவில் இருந்த போது ''இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள், ''அல்லாஹ்வும், அவன் தூதருமே நன்கறிவர்!'' என்றனர். உடனே அவர்கள், ''இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' என்று கேட்க மக்கள் ''அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிவர்!'' என்றனர். அவர்கள் (இது) ''புனிதமிக்க நகரமாகும்!'' என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள், ''இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?'' என்றதும் மக்கள், ''அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர்'' என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''இது புனிதமிக்க மாதமாகும்'' எனக் கூறிவிட்டு, ''உங்களுடைய இந்தப் புனித நகரத்தில், உங்களுடைய இந்தப் புனித மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போலவே அல்லாஹ் உங்கள் உயிர்களையும், உடைமைகளையும், உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!'' எனக் கூறினார்கள்.புகாரி 1742


இப்படிப்பட்ட புனிதங்களை உணர்ந்து அதன் மூலம் படிப்பினை பெற்று வாழக்கூடிய மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக!

உம்ரா செய்வது எப்படி?

'ஒரு உம்ரா செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 'ஹஜ் செய்பவர்களும், உம்ரா செய்பவர்களும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் ஆவார்கள். அவர்கள் அவனிடம் கேட்டால் அவர்களுக்கு அவன் கொடுக்கிறான். அவர்கள் பாவமன்னிப்புக் கேட்டால் அவர்களை மன்னிக்கிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: நஸயி, இப்னுமாஜா)


மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ்களும் இன்னும் பல ஹதீஸ்களும் உம்ராவின் சிறப்புகளைக் கூறுகின்றன.


இன்று உம்ரா செல்லக்கூடியவர்கள் அதிகரித்துள்ளனர், ஆனால் உம்ராவிற்கான வழிகாட்டுதல்கள் தனியாகத் தொகுக்கப்படாமல் ஹஜ்ஜுடன் சேர்த்து கூறப்பட்டடிருப்பது புதிதாக உம்ராச் செல்லக் கூடியவர்களுக்கு சிரமமாக இருக்கிறது. இக்குறையை நீக்குவதற்காக இங்கு உம்ராச் செய்வதற்கான வழிகாட்டுதல் சுருக்கமாகத் தரப்படுகிறது.


1. இஹ்ராம் :


மீக்காத் எனும் எல்லையை அடைந்ததும் குளித்து விட்டு இஹ்ராம் உடையை அணிந்து கொள்ள வேண்டும். (மீக்காத்திலிருந்து கஃபாவை தவாஃப் செய்ய ஆரம்பிக்கும் வரை வலது தோளைத் திறந்த வைத்துக் கொள்வது நபிவழிக்கு மாற்றமானது.)


பர்ளுத் தொழுகையின் நேரமாக இருந்தால் அதனைத் தொழுதுவிட்டு அல்லது உளூவுடைய சுன்னத் இரண்டு ரக்அத்துக்களைத் தொழுது விட்டு உம்ராவுக்கு நிய்யத் வைக்க வேண்டும். (இஹ்ராமிற்கென்று பிரத்தியேகமான எந்தத் தொழுகைக்கும் நபிவழியில் ஆதாரம் இல்லை.)


உம்ராச் செய்வதாக மனதால் நினைப்பதே நிய்யத் எனப்படும். அவ்வாறு நினைத்து விட்டு لَبَّيْكَ اَللهُمَّ عُمْرَةً (லப்பைக அல்லாஹும்ம உம்ரதன்) என்றோ اَللهُمَّ لَبَّيْكَ عُمْرَةً (அல்லாஹும்ம லப்பைக உம்ரதன்) என்றோ கூற வேண்டும்.


2. உம்ராவுக்கு நிய்யத் வைத்ததிலிருந்து கஃபதுல்லாஹ்வைச் சென்றடையும் வரை தல்பியாவைத் திரும்பத் திரும்பச் செல்லிக் கொண்டிருக்க வேண்டும். ஆண்கள் சத்தத்தை உயர்த்தியும் பெண்கள் மெதுவாகவும் தல்பியாவைச் சொல்ல வேண்டும். தல்பியா வாசகங்கள் கீழே தரப்பட்டுள்ளன.


لَبَّيْكَ اَللهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لآ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لآ شَرِيْكَ لَكَ (அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்நிஃமத லக வல் முல்க், லாஷரீக லக்.)


3. தவாஃப் செய்தல்:


மஸ்ஜிதுல் ஹராமை அடைந்ததும் வுழூச் செய்து விட்டு கஃபதுல்லாஹ்வை நோக்கிச் செல்ல வேண்டும். தனது வலது தோளைத் திறந்தவராக ஹஜருல் அஸ்வதின் பக்கம் சென்று, அதனைத் தனது வலது கையினால் தொட்டு பிஸ்மில்லாஹி அல்லாஹுஅக்பர் என்று கூற வேண்டும். முடிந்தால் அக்கல்லை முத்தமிடலாம். முடியாவிட்டால் கல்லைக் கையினால் தொட்டு கையை முத்தமிட வேண்டும். அதற்கும் முடியவில்லையென்றால் அதனை முன்னோக்கி அல்லாஹுஅக்பர் என்று கூறி தனது வலது கையால் அதன்பால் சுட்டிக்காட்ட வேண்டும். அப்போது கையை முத்தமிடக் கூடாது.


அவ்விடத்திலிருந்து தவாiஃப ஆரம்பிக்க வேண்டும். ஹஜருல் அஸ்வதிலிருந்து ஆரம்பித்து மீண்டும் ஹஜருல் அஸ்வதை வந்தடைவது ஒரு சுற்றாக கணிக்கப்படும். இவ்வாறு ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும். ஒவ்வொரு சுற்றின் ஆரம்பத்திலும் முடிந்தால் ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது அல்லது அதனைத் தொட்டு கையை முத்தமிடுவது அல்லது அதனை நோக்கிக் கையைக் காட்டுவது நபிவழியாகும்.


ஆரம்ப மூன்று சுற்றுக்களிலும் தொங்கோட்டமாகவும், ஏனைய நான்கிலும் சாதாரணமாகவும் செல்ல வேண்டும்.


தவாஃபின் போது (ஹஜருல் அஸ்வதிற்கு முன்னாலுள்ள) ருக்னுல் யமானி என்ற மூலையை அடைந்தால் பிஸ்மில்லாஹி அல்லாஹுஅக்பர் என்று கூறி அதனைத் தொட வேண்டும். கையை முத்தமிடக் கூடாது. தொட முடியாவிட்டால் அதற்குக் கையைக் காட்டக் கூடாது.


ருக்னுல் யமானியிலிருந்து ஹஜருல் அஸ்வதை அடையும் வரை, رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّار 'ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்' என்று கூற வேண்டும். (பொருள்: எங்கள் இரட்சகா! எங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மையைத் தருவாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!) இது அல்லாமல் தவாஃபின் போது ஒதுவதற்கென்று எந்த துஆக்களும் ஹதீஸ்களில் வர வில்லை. எனவே தான் விரும்பிய துஆக்களைத் தனக்குத் தெரிந்த மொழிகளில் கேட்கலாம். அல்குர்ஆன் ஓதலாம். மேலும் திக்ருகள் செய்யலாம்.


தவாஃப் செய்து முடிந்ததும் வலது தோளை மூடிக் கொள்ளலாம்.


4. தவாஃப் செய்து முடிந்தால்...?: தவாஃப் செய்து முடிந்ததும் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும். முதலாவது ரக்அத்தில் சூரத்தல் ஃபாத்திஹாவுடன் குல் யா அய்யுஹல் காபிரூன் சூராவையும், இரண்டாவது ரக்அத்தில் சூரதுல் ஃபாத்திஹாவுடன் குல் ஹுவல்லாஹு அஹத் சூராவையும் ஓத வேண்டும்.


இந்த தொழுகையை மாகமு இப்ராஹீமிற்குப் பின்னால் நின்று தொழுவது சிறந்தது. முடியாவிட்டால் பள்ளியின் எந்த இடத்திலும் தொழலாம்.


தொழுது முடிந்ததும் ஸம்ஸம் தண்ணீரை அதிகமாகக் குடிப்பது சுன்னத்.


5. ஸயீ செய்வது:


தவாஃப் செய்து, தொழுது முடிந்தால் ஸயீ செய்வதற்காக ஸஃபாவை நோக்கிச் செல்ல வேண்டும்.


ஸஃபாவை நெருங்கும் போது, إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِر الله فَمَنْ حَجَّ الْبَيْتَ أَو اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَّطَّوَّفَ بِهِمَا، وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ الله شَاكِرٌ عَلِيْمٌ 'இன்னஸ் ஸஃபா வல்மாவத மின் ஷஆயிரில்லாஹ், ஃபமன் ஹஜ்ஜல் பைத அவிஃதமர ஃபலா ஜுனாஹ அலைஹி அய்யத்தவ்வஃப பிஹிமா, வமன் ததவ்வஅ கைரன் ஃபஇன்னல்லாஹ ஷாகிருன் அலீம்'. (2:158) என்று ஓத வேண்டும்.


பின்னர் கஃபாவைக் காணுமளவுக்கு ஸஃபாவில் ஏறி பின்வருமாறு ஓத வேண்டும்.


لآ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ ، لآ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيْتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ، لآ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الأحْزَابَ وَحْدَهُ 'லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர். லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யி வயுமீத்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லாஇலாஹ இல்லல்லாஹுவஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸர அப்தா, வஹஸமல் அஹ்ஸாப வஹ்தா'. பிறகு கையை உயர்த்தி தனக்கு விருப்பமான துஆக்களை (விரும்பிய மொழியில்) கேட்க வேண்டும். துஆக் கேட்டு முடிந்ததும் மேற்படி திக்ரைக் கூறிவிட்டு மீண்டும் கைகளை உயர்த்தி துஆச் செய்ய வேண்டும். இரண்டாவது முறை துஆக் கேட்டு முடிந்ததும் மேற்படி திக்ரை ஓதிவிட்டு மாவாவை நோக்கிச் செல்ல வேண்டும். பச்சை அடையாளம் இடப்பட்ட தூண்களுக்கு இடையில் ஆண்கள் தொங்கோட்டமாகச் செல்ல வேண்டும். (பெண்கள் சாதாரணமாக நடந்து செல்ல வேண்டும்.)


மர்வாவை அடைந்ததும் அதில் ஏறி கிப்லாவை முன்னோக்கி ஸஃபாவில் செய்தது போன்று (திக்ரு, துஆ) செய்ய வேண்டும்.


ஸஃபாவிலிருந்து மாவாவுக்குச் செல்வது ஒரு சுற்றாகும். மர்வாவிலிருந்து மீண்டும் ஸஃபாவுக்கு வருவது இரண்டாவது சுற்றாகக் கணிக்கப்படும். இவ்வாறு ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும். ஏழாவது சுற்று மர்வாவில் முடியும். ஸஃபா, மர்வாவில் ஓதுவதற்கென்று ஏற்கனவே கூறப்பட்ட திக்ருகளைத் தவிர ஸயீயில் ஓதுவதற்கென்று குறிப்பாக ஏதும் நபி (ஸல்) அவர்களால் கற்றுத்தரப்பட வில்லை. எனவே தவாiஃபப் போன்று குர்ஆன் ஓதுதல், திக்ரு செய்தல், துஆச் செய்தல் போன்றவற்றில் ஈடுபடலாம்.


ஸயீ செய்வதற்கு வுழு அவசியமில்லை. 6. ஸயீ முடிந்ததும்:


ஸயீ முடிந்ததும் தலை முடியை முற்றாக மழிக்க வேண்டும், அல்லது கத்தரிக்க வேண்டும்.


கத்தரியால் சில முடிகளை மட்டும் வெட்டுவது மிகப் பெரிய தவறாகும்.


இத்துடன் உம்ரா நிறைவு பெறுகிறது.


(குறிப்பு: இஹ்ராமில் தடுக்கப்பட்டவை, இஹ்ராம் கட்டியவர் தவிர்ந்து கொள்ள வேண்டியவை போன்ற மேலதிக விபரங்களை விரிவான நூற்களில் காணவும்.)


உங்களது உம்ராவை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக!

இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு

இந்திய விடுதலைப்போர் என்பது ஒரு வீர காவியம். இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றனர். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இத்தியாக வேள்வியில் ஈடுபட்டவர்களில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. இதனை 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான 'இல்லஸ்டிரேட்டட் வீக்லி' என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.


'இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட விடுதலைப்போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம்' என்று அந்தப் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.






அலைகடல் அரிமா குஞ்சாலி மரைக்காயர்


இந்திய விடுதலைப் போரின் முன்னோடிகளாகத் திகழ்பவர் ஒரு முஸ்லிம் தான் என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. கடற்போர் பல செய்த தமிழ் மன்னர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் புகழ்ந்து உரைக்கின்றன. அம்மன்னர்களைப் போன்று கடற்போர் பல செய்தவர் குஞ்சாலி மரைக்காயர். ஆங்கிலேயர் நம் நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முன் இங்கு வந்து கால்பதித்த போர்ச்சுகீசியரை விரட்டியடிக்க கடற்போர் பல செய்த குஞ்சாலி மரைக்காயர் தான் இந்திய விடுதலைப் போரின் முன்னோடி. கடற்போரில் சாகசங்கள் புரிந்த இந்த வீரத் தளபதியை வெற்றி கொள்ள முடியாத எதிரிகள் நயவஞ்சகமாகக் கொன்றனர்.






வரி தர மறுத்த வரிப்புலிகள்


இந்தியா 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. ஆனால், அதற்கு முன்னரே சுதந்திரம் பெற்று விட்டோம் என்று மிகுந்த நம்பிக்கையுடனும், உறுதியுடனும் 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்' என்று பாடினார் மகாகவி பாரதியார். அந்த அளவுக்கு அவரது மனதில் நம்பிக்கை விதையை விதைத்தது ஹாஜி ஷரியத்துல்லா 1781ம் ஆண்டு தொடங்கிய பெராஸி இயக்கமும் அதன் பின் தோற்றுவிக்கப்பட்ட வஹாபி இயக்கமும் ஆகும் என்று கூறலாம்.


வஹாபி இயக்கம் என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படும் இயக்கத்தை தோற்றுவித்தவர் சையது அஹமது என்பவர் ஆவார். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் பல போராட்டங்களை அந்த வஹாபி இயக்கம் நடத்தியது. வங்கத்தில் வரி கொடா இயக்கம் நடத்தி நாடியா மாவட்டத்தில் 24 பர்கனாக்களைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, இந்திய மக்கள் சுதந்திரச் சுவாசிக்க வழிவகுத்தது. சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று தீர்க்க தரிதனத்துடன் அமரகவி பாரதி பாடியதற்கு இந்த வரலாற்றுப் பிண்ணனி தான் காரணம் என்று உகிக்க முடிகிறது.






கதி கலக்கிய கான் சாஹிபு


ஒரு காலத்தில் ஆங்கிலேயருக்கு வேண்டியவராக இருந்து, பிறகு அவர்களுக்கு எதிராக மாறியவர் கான்சாஹிப்.. இவர் யூசுப்கான், நெல்லூர் சுபேதார், முஹம்மது யூசுப், கும்மந்தான், கம்மந்தான் சாகிபு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார். யூசுப் கான் சாஹிபு மதுரையில் ஆங்கிலேயரின் கொடியைப் பீரங்கி வாயில் வைத்துச் சுட்டுப் பொசுக்கி விட்டு சுதந்திரப் பிரகடனம் செய்தவர். இவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது சொந்த நாட்டுத் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஆங்கிலேயர் அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றனர்.






ஷா அப்துல் அஜீஸ்


இந்தியாவைச் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்த இஸ்லாமிய விடுதலை வீரர்களில் ஷா அப்துல் அஸீஸ் அல் தெஹ்லவியும் ஒருவர். பிரிட்டிஷ் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்னல்கள் இழைத்து வருவதைக் கண்டு வேதனைப்பட்ட அவர் இந்தியாவை 'தாருல் ஹர்ப்' ஆகப் பிரகடனம் செய்தார்.


ஷா வலியுல்லாஹ்வின் மூத்த மகனாக 1746ம் ஆண்டு டெல்லியில் பிறந்த தெஹ்லவி ஆங்கிலேயரை எதிர்க்க முஸ்லிம்களுக்கு இராணுவப் பயிற்சியளிக்கத் திட்டமிட்டிருந்தார். அத்திட்டம் நிறைவேறுவதற்கு முன்னரே காலமாகிவிட்டார். இவர் கூறியுள்ள மார்க்கத் தீர்ப்புகள் 'பத்வா' எனும் பெயருடன் இரண்டு பகுதிகளாக வெளிவந்துள்ளன.






அஞ்சாத புலி ஹைதர் அலி


18ம் நூற்றாண்டில் சிறந்த தளபதியாகத் திகழ்ந்தவர் ஹைதர் அலி. இவர் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போர் 'முதலாம் மைசூர் போர்' எனப்படுகிறது. ஹைதர் அலியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஆங்கிலேயர் தோற்று ஓடினர். ஆனால், இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயர் சூழ்ச்சி செய்து இவரைத் தோற்கடித்தனர்.






தீரன் திப்பு சுல்தான்


'மைசூர் புலி' திப்பு சுல்தானின் பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயரின் உடல்கள் நடுங்கும். இவர் ஹைதர் அலியின் மகனாவார். இரண்டாம் மைசூர் போரில் இவரது பங்கு மகத்தானது. தன் தந்தையின் மறைவிற்குப் பின், ஆங்கிலேயரை எதிர்த்து இவர் போரில் ஈடுபட்டார்.


1790ம் ஆண்டு முதல் 1792ம் ஆண்டு வரை நடை பெற்ற மூன்றாம் மைசூர் போரில் திப்பு தோல்வியடைந்தார். தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் கூறிய போது, திப்பு சுல்தான் 'முடியாது' என்று மறுப்புத் தெரிவித்தார். மதிப்பிற்குரிய இந்த வீரருக்கு ஒருவன் துரோகம் செய்தான். அதன் காரணமாக எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு திப்பு சுல்தான் இரையானார்.






வங்கத்துச் சிங்கங்கள்


வங்காளத்தில் 1776ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம் பக்கிரிகள் நடத்திய புரட்சியால் பிரிட்டிஷ் ஆட்சி கதிகலங்கி விட்டது. இந்தப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய சிராக் அலியைப் பிடிக்க ஆங்கிலேயர்கள் எவ்வளவோ முயற்சித்தனர். தலைமறைவான அவரை கடைசி வரை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லை.






தென்னாட்டு வேங்கைகள்


தென்னகத்தின் பல பகுதிகளிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் புரட்சியாளர்கள் கிளர்ச்சி செய்தனர். 1800ம் ஆண்டு இக்கிளர்ச்சிக்கு கோவையில் தலைமை தாங்கி நடத்தியவர் முஹம்மது ஹசன். ஓசூரில் தலைமை வகித்து நடத்தியவர் ஃபத்தேஹ் முஹம்மது. ஆங்கிலேயப் படை முஹம்மது ஹசனைக் கைது செய்தது. கிளர்ச்சி பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள ஆங்கிலேயர் அவரை சித்ரவதை செய்தனர். புரட்சியாளர்களின் திட்டங்கள் ஆங்கிலேயருக்குத் தெரிந்து விடக் கூடாது என்று கருதிய முஹம்மது ஹசன் தன் குரல்வளையை அறுத்துக் கொண்டு இந்தியத் தாயின் விடுதலைக்குத் தன் இன்னுயிரை அர்ப்பணித்துக் கொண்டார்.


குடகுப் பகுதியில் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து நடத்திய மக்கான் கான், மகபூப்தீன் ஆகியோரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். மங்களூருக்கு அருகில் உள்ள எட்காலி குன்றில் இவர்கள் இருவரும் 1800ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதியன்று தூக்கிலிடப் பட்டனர்.






முஃப்தீ இனாயத் அஹ்மது


தேடி வந்த முன்சீப் பதவியை உதறித் தள்ளி விட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் முஃப்தீ இனாயத் அஹ்மது. உ.பி.யில் 1822ம் ஆண்டு பிறந்த இவர் நிகழ்த்திய தீப்பொறி பறக்கும் சொற்பொழிவுகள் மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டின. இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு இவரைக் கைது செய்தது. இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 'நீங்கள் புரட்சி செய்தது உண்மையா?' என்று நீதிபதி இவரிடம் கேட்டார்.


'ஆம். அடிமை விலங்கை உடைத்தெறியப் புரட்சி செய்வது என்னுடைய கடமை என்று உணர்ந்து கொண்டேன். புரட்சி செய்தேன்' என்று முஃப்தி இனாயத் அஹ்மது துணிச்சலுடன் பதிலளித்தார். இவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.






அன்றும்... அயோத்தி அவலம்...


தேச விடுதலைக்காக நாடு முழுவதும் துறவிக் கோலத்தில் சுற்றுப்பயணம் செய்து புரட்சிப் பிரச்சாரம் செய்தவர் மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி. சென்னை நவாபின் வழிவந்தவரான இவர் கிழக்கு அயோத்தி எனப்படும் பைசாபாத்தின் அதிபராக இருந்தவர். இவரது புரட்சிப் பிரச்சாரம் ஆங்கிலேயருக்கு ஆத்திரமூட்டியது. இவரைக் கைது செய்து பைசாபாத் சிறையில் அடைத்தனர். புரட்சியாளார்கள் சிறைக் கதவை உடைத்து இவரை மீட்டு வந்தனர். இவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ ஒப்படைப்பவருக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது.


தலைமறைவாக இருந்த மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி அயோத்தி மன்னன் விரித்த வஞ்சக வலையில் சிக்கினார். அவரைக் காண யானைப் பாகனாக மாறு வேடத்தில் சென்ற போது, அயோத்தி மன்னனின் தம்பி பாவென் என்பவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். 1858ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதியன்று அவரது தலையை அயோத்தி மன்னன் வெட்டி ஆங்கிலேயரிடம் கொண்டு போய்க் கொடுத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசை பெற்றான்.






புதைந்து போன புரட்சி மலர்கள்


வட இந்தியாவில் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது ஹியூவீலர் என்னும் ஆங்கிலேய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். இப்புரட்சியில் கலந்து கொண்ட ஜாபர் அலி என்பவர் தான் அவரைச் சுட்டுக் கொன்றார் என்ற தவறான தவகல் ஆங்கிலேய அதிகாரிகளுக்குத் தரப்பட்டது. ஜாபர் அலி கைது செய்யப்பட்டார். அவரை ஒரு தூணில் கட்டி வைத்து, சாட்டையால் அடித்தனர். அவரது உடலிலிருந்து கசிந்த இரத்தம் கீழே விரிக்கப்பட்டிருந்த ஈரப்பாயில் சிந்தி உறையாமல் ஈரமாக இருந்தது. பாயில் சிந்திய இரத்தத்தை நாவினால் சுத்தப்படுத்தும் படி ஜாபர் அலியை சித்ரவதை செய்தனர். பாயை சுத்தம் செய்த போதும் சாட்டையால் அவரை அடித்தனர். இறுதியில் ஜாபர் அலி ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.


1857ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது டிட்டு மிர் மியான் என்று அழைக்கப்பட்ட மிர் நிசார் அலி வஹாபிகளை ஒன்று திரட்டிக் கிளர்ச்சியில் ஈடுபடுத்தினார். கொல்கத்தா அருகே பல கிராமங்களை ஆங்கிலேயரின் அதிக்கத்திலிருந்து விடுவித்தார். பிரிட்டிஷ் தளபதி அலெக்சாண்டர் தலைமையில் இராணுவம் வந்து கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் தொடுத்தது. இதில் 400 வஹாபியர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியின் முன்னணியில் இருந்த ரசூல் என்பவர் தூக்கிலிடப்பட்டார்.






அன்றும் ஒரு பொடோ


இந்திய மக்களை ஒடுக்குவதற்காக ஆங்கிலேயர்கள் பல அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்தனர். அவற்றுள் மிகக் கொடுமையானது 'ரௌலட் சட்டம்'. இந்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியாவெங்கும் பெரும் கிளர்ச்சி மூண்டது. பஞ்சாபில் இக்கிளர்ச்சி மிகத் தீவிரமாக நடைபெறக் காரணமாக இருந்தவர் டாக்டர் சைபுதீன் கிச்சுலு. இவரைப் பிரிட்டிஷ் இராணுவம் அமிர்தஸரசிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த தர்மசாலா என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றது. இதனை அறிந்த மக்கள் கொதிப்படைந்தனர். போலீஸ் ஆணை ஆணையர் அலுவலகத்திற்கு அவர்கள் பெருந்திரளாகச் சென்றனர். அந்த மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து சேதம் விளைவித்தனர். இதில் ராபின்சன், சார்ஜண்ட் ரௌலண்ட் என்னும் இரு ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர்.


அப்போது மக்களை அமைதிப்படுத்திக் கொண்டிருந்த மக்பூல் மாமூத் என்னும் வழக்கறிஞரைப் போலீசார் கைது செய்தனர். ராபின்சன், ரௌலண்ட் ஆகியோரைக் கொன்றவர்கள் யார் என்று கூறும் படி அவரைச் சித்ரவதை செய்தனர். 'கொலையாளிகளை என்னால் அடையாளம் காட்ட முடியாது' என்று அவர் எழுதிக் கொடுத்தார். உடனே போலீசாரே சில பெயர்களை எழுதி, அவர்கள் குற்றவாளிகள் என்று வாக்குமூலம் தருமாறு அவரை வற்புறுத்தினர். 'எனக்கு மனசாட்சி உண்டு, பொய் சொல்ல மாட்டேன்' என்று அவர் உறுதியாகக் கூறிவிட்டார். மன சாட்சியுடன் நடந்து கொண்ட அவரது வக்கீல் சான்றிதழ் பறிக்கப்பட்டது.


இந்தக் கலவரத்தின் போது ஈஸ்டன் என்னும் ஆங்கிலப் பெண்மணியைத் தாக்க முயன்றதாக முஹம்மது அக்ரம் என்பவர் கைது செய்யப்பட்டார். உண்மையில் அவர் ஈஸ்டனைத் தாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. ஆனால் விசாரணையில் அவர் குற்றவாளி என்று கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டது.


சட்டத்தை மீறி தண்டியில் உப்பு அள்ளிய காந்தியடிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மகாராஷ்டிர மாநிலத்தில் வெற்றிகரமாக பொது வேலைநிறுத்தம் நடத்தியவர் அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன். அப்போது அந்த மாநிலத்தில் பல இடங்களில் கலவரங்கள் நடந்தன. இக்கலவரங்களைத் தூண்டிவிட்டதாக அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன் மீது வழக்குத் தொடரப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1931ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதியன்று ஏர்வாடா சிறையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.


ககோரி ரயில் கொள்ளை வழக்கில் புரட்சி வீரர் அஷ்பாகுல்லாஹ் கான் மீது விசாரணை நடைபெற்றது. 'நீ முஸ்லிம். மற்ற புரட்சிக்காரர்கள் இந்துக்கள். அவர்களைக் காட்டிக் கொடுத்தால் உனக்கு நிபந்தனையற்ற விடுதலை கிடைக்கும். ஏராளமான பணமும் தரப்படும்' என்றெல்லாம் கூறி வெள்ளை அதிகாரிகள் ஆசை காட்டினார்கள். இந்த ஆசை வார்த்தைகளையெல்லாம் கேட்ட அஷ்பகுல்லாஹ் கான் பாறைபோல் அசையாமல் நின்றார். தங்கள் பரித்தாளும் சூழ்ச்சி பலிக்காமல் போகவே பிரிட்டிஷார் இவருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தனர். அவர் தூக்கில் ஏற்றப்பட்ட நாளன்று திருக்குர்ஆனைக் கழுத்திலே தொங்கப் போட்டார். ஹாஜிகளைப் போன்று 'லப்பைக் லப்பைக்' என்று கூறிக் கொண்டிருந்தார். தாமே சுருக்குக் கயிற்றை எடுத்துக் கழுத்திலே மாட்டிக் கொண்டார். அஷ்பகுல்லாஹ் கான் உ.பி.யில் உள்ள ஷாஜஹான்பூரில் பிறந்தவர்.


முஹம்மதலி, ஷெளகத் அலி, அபுல்கலாம் அஸாத் ஆகியோர் காந்தியடிகளின் ஆதரவுடன் துவக்கிய கிலாஃபத் இயக்கத்திற்குத் தமிழக முஸ்லிம்கள் பேராதரவு அளித்தனர். காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் இந்த இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார். ஆங்கில ஆட்சியை எதிர்த்து மாணவர்கள் கல்லூரிகளையும் படிப்பையும் துறக்க வேண்டும் என்ற காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று பி.ஏ படிப்பை இடையில் நிறுத்தினார். பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். கதர் மீது மிகுந்த அபிமானம் கொண்ட இவர் தனது திருமணத்தின் போது கரடுமுரடான கதர் ஆடை தான் அணிந்திருந்தார்.


விடுதலைப் போரில் ஈடுபடுவதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலையை உதறி எறிந்தவர் - கம்பம் பீர்முஹம்மது பாவலர். இவர் கதர் இயக்கத்தின் தீவிரத் தொண்டராகத் திகழ்ந்தவர். விடுதலை உணர்வைத் தூண்டும் நாடகத்தில் நடித்ததற்காக இவர் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பொதுக்கூட்டங்களில் பேச ஆங்கிலேய அரசு இவருக்குத் தடை விதித்தது. அதனால் இவர் வாயைத் துணியால் கட்டிக் கொண்டு மேடையேறி சைகைகளின் மூலம் பேசி வரலாறு படைத்தவர்.






சிலையை உடைத்த சீலர்


தமிழ்நாட்டில் கதர் இயக்கத்திற்கு அருந்தொண்டு புரிந்தவர்களில் காஜா மியான் ராவுத்தர், 'மேடை முதலாளி' என்று அன்புடன் அழைக்கப்பட்ட மு.ந.அப்துர்ரஹ்மான் சாகிப், ஆத்தூர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இலவசமாக கதராடை வழங்கியவர் காஜா மியான் ராவுத்தர். பெருமளவில் கதர்த்துணி உற்பத்தி செய்வதற்காக கதர் ஆலை ஒன்றையே அவர் நிறுவினார். 'மேடை முதலாளி' அப்துர்ரஹ்மான் சாகிப் மக்களிடையே கதர் பிரச்சாரம் செய்தார். மக்களுக்கு இலவசமாக கதராடை வழங்கினார். கதர்த் துணி தயாரிக்க இவர் தனது வீட்டிலேயே தறி அமைத்தார். பல வீடுகளுக்குச் சென்று கதர் ராட்டினம் கொடுத்து, கதர் நூற்கக் கற்றுக் கொடுத்தார்.


கதர் அணியாத முஸ்லிம் மணமக்களின் திருமணங்களில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்தவர் அல்லாமா அப்துல் ஹமீத் பாகவி. இவர் தீவிர கதர் பக்தராகத் திகழ்ந்தவர். இவர் பல ஊர்களுக்குச் சென்று மேடையேறி விடுதலைப் போர் முரசு முழங்கினார்.


ஆங்கிலேய அரசின் இராணுவத் தளபதியாக இருந்த நீல் எனப்படும் நீசன் மிகுந்த கொடூரக்காரன். சிப்பாய்க் கலகத்தின் போது கண்ணில் பட்ட இந்தியர்களைச் சுட்டுக் கொன்றவன். இவனுக்குச் சென்னையில் சிலை வைக்கப்பட்டிருந்தது. அச்சிலையைத் தகர்க்கும் போராட்டம் 1927ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடை பெற்றது. இராமநாதபுரம் முஹம்மது சாலியா சிலையை சம்மட்டியால் அடித்து உடைத்தார். இவருக்கு முன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த அப்துல் மஜீது, லத்தீப், இராமநாதபுரம் மஸ்தான், பண்ருட்டி முஹம்மது உசேன் முதலியவர்கள் சிலை உடைப்புப் போரில் பங்கு கொண்டு 6 மாதம் முதல் 2 வருடம் வரை கடுங்காவல் தண்டனை பெற்றனர்.






பிரமிக்க வைத்த வள்ளல் ஹபீப்


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் விடுதலைப் போராட்டத்தில் கிழக்காசியாவில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் பெரும் பங்கு கொண்டனர். மியான்மரில் (அன்றைய பர்மா) ஹபீப் பெரும் வணிகராகத் திகழ்ந்தவர்.


பெரும் கோடீஸ்வரர். நேதாஜி, மியான்மர் சென்ற போது அவர் தம் சொத்துக்கள் அனைத்தையும் இந்திய நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணம் செய்தார். அதைக் கண்டு நேதாஜி பிரமித்து விட்டார். இதன் பின் கிழக்காசியாவில் நேதாஜி பயணம் செய்த இடங்களிலெல்லாம் ஹபீபின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். 'நாட்டைப் பிடித்திருக்கும் பிணி நீங்க ஹபீப் மருந்து தேவை' என்று அவர் பேசிய கூட்டங்களில் எல்லாம் சொல்லலானார்.


ஹபீபுர் ரஹ்மான், ஷாநவாஸ் கான், கரீம் கனி, மௌலானா கலீலுர்ரஹ்மான், முஹ்யித்தீன் பிச்சை ஆகிய இந்திய முஸ்லிம்கள் நேத்தாஜியின் உதவியாளர்களாக இருந்து அரும்பணியாற்றினார்கள்.






சிங்கை சிங்கம்


1914-ம் ஆண்டில் சூரத்தில் பிறந்து, சிங்கப்பூரில் வாழ்ந்த காசிம் இஸ்மாயில் மன்சூர் பெரும் வணிகர், கோடீஸ்வரர்.


1915 - ம் ஆண்டு ரங்கூனில் முகாமிட்டிருந்த இந்தியப்படையினர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் புரட்சியில் கலந்து கொள்வதென முடிவு செய்தனர். இந்தப் படை அணியினருக்குத் தேவையான ஆயுதங்களை வழங்கி ஊக்குவிக்க முன்வந்தார் காசிம் இஸ்மாயில் மன்சூர். இந்திய விடுதலைக்காகப் புரட்சியாளர்கள் நடத்தும் கிளர்ச்சியில் கலந்து கொள்ள சிங்கப்பூரிலிருந்து ஆட்களை ரங்கூனுக்கு அனுப்ப அவர் ஏற்பாடு செய்தார். இத்தகவல் பிரிட்டிஷ் உளவுத் துறைக்குத் தெரிந்து விட்டது. உடனே இவர் கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றச் சாட்டை இராணுவ நீதிமன்றம் விசாரித்து, இவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. 1915 - ம் ஆண்டு ஜூன் மாதம் அவர் சிங்கப்பூர் சிறைச் சாலையில் தூக்கிலிடப்பட்டார்.


இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக வெளிநாடுகளில் இருந்த இந்திய இராணுவ முகாம்களில் புரட்சி நடத்தத் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின்படி, சிங்கப்பூரில் முகாமிட்டிருந்த இந்தியக் காலாட்படை அணியினர் புரட்சியில் ஈடுபட்டனர். இராணுவச் சட்டத்தை அமல்படுத்தி இவர்களது புரட்சியை ஒடுக்கினர் ஆங்கிலேயர். புரட்சி பற்றி அவர்கள் விசாரணை நடத்தி ரசூலுல்லாஹ், இம்தியாஸ் அலி, ரக்னுத்தீன் ஆகிய மூவருமே இப்புரட்சிக்குக் காரணம் என்று கண்டு பிடித்தனர். இராணுவ நீதிமன்றம் இந்த மூவரையும் பலரது முன்னிலையில் சுட்டுக் கொல்லும் படி உத்தரவிட்டது. அதன்படி இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


புரட்சியில் ஈடுபட்ட காலாட்படை அணிக்குத் தலைமை வகித்த சுபேதார் தண்டுகான், ஜமேதார் கிஸ்டிகான் ஆகியோருக்கு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. 1915 ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதியன்று இவர்கள் சிங்கப்பூர் சிறைச்சாலை வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.






 
TNB | Distributed by Deluxe Templates